ஒரு வருடத்தில் பைபிள்
ஜூலை ௧௭


௨ குறிப்பேடு ௨௬:௧-௩௨
௧. வாசல்காக்கிறவர்களின் வகுப்புகளாவன: கோராகியர் சந்ததியான ஆசாபின் புத்திரரிலே கோரேயின் குமாரன் மெஷெலேமியா என்பவன்,
௨. மெஷெலேமியாவின் குமாரர், மூத்தவனாகிய சகரியாவும்,
௩. எதியாயேல், செபதியா, யதனியேல், ஏலாம், யோகனான், எலியோனாய் என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் ஐந்தாம் ஆறாம் ஏழாம் குமாரரும்,
௪. ஓபேத்ஏதோமின் குமாரர், மூத்தவனாகிய செமாயாவும்,
௫. யோசபாத், யோவாக், சாக்கார், நெதனெயேல், அம்மியேல், இசக்கார், பெயுள்தாயி என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் ஐந்தாம் ஆறாம் ஏழாம் எட்டாம் குமாரருமே; தேவன் அவனை ஆசீர்வதித்திருந்தார்.
௬. அவன் குமாரனாகிய செமாயாவுக்கும் குமாரர் பிறந்து, அவர்கள் பராக்கிரமசாலிகளாயிருந்து, தங்கள் தகப்பன் குடும்பத்தாரை ஆண்டார்கள்.
௭. செமாயாவுக்கு இருந்த குமாரர் ஒத்னியும், பலசாலிகளாகிய ரெப்பாயேல், ஓபேத், எல்சாபாத் என்னும் அவன் சகோதரரும், எலிகூவும் செமகியாவுமே.
௮. ஓபேத்ஏதோமின் புத்திரரும் அவர்கள் குமாரரும் அவர்கள் சகோதரருமாகிய ஊழியத்திற்குப் பலத்த பராக்கிரமசாலிகளான அவர்களெல்லாரும் அறுபத்திரண்டுபேர்.
௯. மெஷெலேமியாவின் குமாரரும் சகோதரருமான பராக்கிரமசாலிகள் பதினெட்டுப்பேர்.
௧௦. மெராரியின் புத்திரரில் ஓசா என்பவனுடைய குமாரர்கள்: சிம்ரி என்னும் தலைமையானவன்; இவன் மூத்தவனாயிராவிட்டாலும் இவன் தகப்பன் இவனைத் தலைவனாக வைத்தான்.
௧௧. இல்க்கியா, தெபலியா, சகரியா என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் குமாரரானவர்கள்; ஓசாவின் குமாரரும் சகோதரரும் எல்லாம் பதின்மூன்றுபேர்.
௧௨. காவல்காரரான தலைவரின்கீழ்த் தங்கள் சகோதரருக்கொத்த முறையாய்க் கர்த்தருடைய ஆலயத்தில் வாசல்காக்கிறவர்களாய்ச் சேவிக்க இவர்கள் வகுக்கப்பட்டு,
௧௩. தங்கள் பிதாக்களின் குடும்பத்தாராகிய சிறியவர்களும், பெரியவர்களுமாய் இன்ன வாசலுக்கு இன்னாரென்று சீட்டுப்போட்டுக்கொண்டார்கள்.
௧௪. கீழ்ப்புறத்திற்குச் செலேமியாவுக்குச் சீட்டு விழுந்தது; விவேகமுள்ள யோசனைக்காரனாகிய சகரியா என்னும் அவன் குமாரனுக்குச் சீட்டுப் போட்டபோது, அவன் சீட்டு வடபுறத்திற்கென்று விழுந்தது.
௧௫. ஓபேத்ஏதோமுக்குத் தென்புறத்திற்கும், அவன் குமாரருக்கு அசுப்பீம் வீட்டிற்கும்,
௧௬. சூப்பீமுக்கும், ஓசாவுக்கும் மண்போட்டு உயர்த்தப்பட்ட வழியும் காவலுக்கு எதிர்காவலும் இருக்கிற மேற்புறமான வாசலுக்கும் சீட்டு விழுந்தது.
௧௭. கிழக்கே லேவியரான ஆறுபேரும், வடக்கே பகலிலே நாலுபேரும், தெற்கே பகலிலே நாலுபேரும், அசுப்பீம் வீட்டண்டையில் இரண்டிரண்டுபேரும்,
௧௮. வெளிப்புறமான வாசல் அண்டையில் மேற்கே இருக்கிற உயர்ந்த வழிக்கு நாலுபேரும், வெளிப்புறமான வழியில் இரண்டுபேரும் வைக்கப்பட்டார்கள்.
௧௯. கோராகின் புத்திரருக்குள்ளும், மெராரியின் புத்திரருக்குள்ளும், வாசல் காக்கிறவர்களின் வகுப்புகள் இவைகளே.
௨௦. மற்ற லேவியரில் அகியா என்பவன் தேவனுடைய ஆலயத்துப் பொக்கிஷங்களையும், பிரதிஷ்டையாக்கப்பட்ட பொருள்களின் பொக்கிஷங்களையும் விசாரிக்கிறவனாயிருந்தான்.
௨௧. லாதானின் குமாரர் யாரென்றால், கெர்சோனியனான அவனுடைய குமாரரில் தலைமையான பிதாக்களாயிருந்த யெகியேலியும்,
௨௨. யெகியேலியின் குமாரராகிய சேத்தாமும், அவன் சகோதரனாகிய யோவேலுமே; இவர்கள் கர்த்தருடைய ஆலயத்துப் பொக்கிஷங்களை விசாரிக்கிறவர்களாயிருந்தார்கள்.
௨௩. அம்ராமீயரிலும், இத்சாகாரியரிலும், எப்ரோனியரிலும், ஊசியேரியரிலும், சிலர் அப்படியே விசாரிக்கிறவர்களாயிருந்தார்கள்.
௨௪. மோசேயின் குமாரனாகிய கெர்சோமின் சந்ததியான செபுவேல் பொக்கிஷப் பிரதானியாயிருந்தான்.
௨௫. எலியேசர் மூலமாய் அவனுக்கு இருந்த சகோதரரானவர்கள், இவன் குமாரன் ரெகபியாவும், இவன் குமாரன் எஷாயாவும், இவன் குமாரன் யோராமும், இவன் குமாரன் சிக்கிரியும், இவன் குமாரன் செலோமித்துமே.
௨௬. ராஜாவாகிய தாவீதும், ஆயிரம்பேருக்கு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிபதிகளுமான பிதாக்களின் தலைவரும், சேனாபதிகளும் யுத்தத்தில் அகப்பட்ட கொள்ளைகளில் எடுத்து,
௨௭. கர்த்தருடைய ஆலயத்தைப் பரிபாலிக்கும்படிக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்ட பொருள்களின் பொக்கிஷங்களையெல்லாம் அந்தச் செலோமித்தும் அவனுடைய சகோதரரும் விசாரித்தார்கள்.
௨௮. ஞானதிருஷ்டிக்காரனாகிய சாமுவேலும், கீசின் குமாரனாகிய சவுலும், நேரின் குமாரனாகிய அப்னேரும், செருயாவின் குமாரனாகிய யோவாபும், அவரவர் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்ட அனைத்தும் செலோமித்தின் கையின்கீழும் அவன் சகோதரர் கையின்கீழும் இருந்தது.
௨௯. இத்சாகாரியரில் கெனானியாவும் அவன் குமாரரும் தேசகாரியங்களைப் பார்க்கும்படி வைக்கப்பட்டு, இஸ்ரவேலின்மேல் விசாரிப்புக்காரரும் மணியக்காரருமாயிருந்தார்கள்.
௩௦. எப்ரோனியரில் அசபியாவும் அவன் சகோதரருமாகிய ஆயிரத்து எழுநூறு பராக்கிரமசாலிகள் யோர்தானுக்கு இப்பாலே மேற்கே இருக்கிற இஸ்ரவேலின்மேல் கர்த்தருடைய எல்லா ஊழியத்திற்கும் ராஜாவின் வேலைக்கும் வைக்கப்பட்டார்கள்.
௩௧. எப்ரோனியரில் எரியாவும் இருந்தான்; அவன் தன் பிதாக்களின் வம்சங்களான எப்ரோனியரில் தலைமையானவன்; தாவீது அரசாண்ட நாற்பதாம் வருஷத்திலே அவர்கள் தேடப்பட்டபோது அவர்களுக்குள்ளே கீலேயாத்தேசத்து ஏசேரிலே பராக்கிரம வீரர் காணப்பட்டார்கள்.
௩௨. பலசாலிகளாகிய அவனுடைய சகோதரர் இரண்டாயிரத்து எழுநூறு பிரதான தலைவராயிருந்தார்கள்; அவர்களைத் தாவீது ராஜா தேவனுக்கடுத்த சகல காரியத்திற்காகவும், ராஜாவின் காரியத்திற்காவும், ரூபனியர்மேலும், காதியர் மேலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தின்மேலும் வைத்தான்.

௨ குறிப்பேடு ௨௭:௧-௩௪
௧. தங்கள் இலக்கத்தின்படி இருக்கிற இஸ்ரவேல் புத்திரருக்கு வம்சங்களின் தலைவரும், ஆயிரத்துக்குச் சேர்வைக்காரரும், நூற்றிற்குச் சேர்வைக்காரரும், இவர்களுடைய தலைவரும் வைக்கப்பட்டிருந்தார்கள்; இவர்கள் வருஷத்திலுண்டான மாதங்களிலெல்லாம் மாதத்திற்கு மாதம் ராஜாவைச் சேவிக்கிறதற்கு வகுக்கப்பட்ட வரிசைகளின்படியெல்லாம் மாறிமாறி வருவார்கள்; ஒவ்வொரு வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
௨. முதலாவது மாதத்துக்கு முதல் வகுப்பின்மேல் சப்தியேலின் குமாரன் யஷொபெயாம் இருந்தான்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
௩. அவன் பேரேசின் சந்ததியாரில் சகல சேனாபதிகளின் தலைவனாயிருந்து முதல் மாதம் விசாரித்தான்.
௪. இரண்டாவது மாதத்தின் வகுப்பின்மேல் அகோகியனான தோதாயி இருந்தான்; அவன் வகுப்பிலே மிக்லோத் தளகர்த்தனாயிருந்தான்; அவன் வகுப்பிலே இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
௫. மூன்றாவது மாதத்தின் மூன்றாம் சேனாபதி யோய்தாவின் குமாரனாகிய பெனாயா என்னும் தலைமையான பிரதானி; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
௬. இந்தப் பெனாயா அந்த முப்பது பராக்கிரமசாலிகளில் ஒருவனும் அந்த முப்பது பேர்களின் தலைவனுமாயிருந்தான்; அவனுடைய வகுப்பை அவன் குமாரனாகிய அமிசபாத் விசாரித்தான்.
௭. நாலாவது மாதத்தின் நாலாம் சேனாபதி யோவாபின் சகோதரனாகிய ஆசகேலும், அவனுக்குப்பின்பு அவன் குமாரன் செப்தியாவுமே; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
௮. ஐந்தாவது மாதத்தின் ஐந்தாம் சேனாபதி இஸ்ராகியனான சம்கூத் என்பவன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
௯. ஆறாவது மாதத்தின் ஆறாம் சேனாபதி இக்கேசின் குமாரன் ஈரா என்னும் தெக்கோவியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
௧௦. ஏழாவது மாதத்தின் ஏழாம் சேனாபதி எப்பிராயீம் புத்திரரில் ஒருவனாகிய ஏலேஸ் என்னும் பெலோனியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
௧௧. எட்டாவது மாதத்தின் எட்டாம் சேனாபதி சாரியரில் ஒருவனாகிய சிபெக்காயி என்னும் ஊஷாத்தியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
௧௨. ஒன்பதாவது மாதத்தின் ஒன்பதாம் சேனாபதி பென்யமீனரில் அபியேசர் என்னும் ஆனதோத்தான்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
௧௩. பத்தாவது மாதத்தின் பத்தாம் சேனாபதி சாரியரில் ஒருவனாகிய மக்ராயி என்னும் நெத்தோபாத்தியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
௧௪. பதினோராவது மாதத்தின் பதினோராம் சேனாபதி எப்பிராயீம் புத்திரரில் பெனாயா என்னும் பிரத்தோனியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
௧௫. பன்னிரண்டாவது மாதத்தின் பன்னிரண்டாம் சேனாபதி ஒத்னியேல் சந்ததியான எல்தாயி என்னும் நெத்தோபாத்தியன்; அவன் வகுப்பில் இருபத்து நாலாயிரம்பேர் இருந்தார்கள்.
௧௬. இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவர்கள்: ரூபனியருக்குத் தலைவன் சிக்ரியின் குமாரன் எலியேசர்; சிமியோனியருக்கு மாக்காவின் குமாரன் செப்பத்தியா.
௧௭. லேவியருக்கு கேமுவேலின் குமாரன் அஷாபியா; ஆரோன் சந்ததிக்குச் சாதோக்.
௧௮. யூதாவுக்குத் தாவீதின் சகோதரரில் ஒருவனாகிய எலிகூ; இசக்காரருக்கு மிகாவேலின் குமாரன் ஒம்ரி.
௧௯. செபுலோனுக்கு ஒப்தியாவின் குமாரன் இஸ்மாயா: நப்தலிக்கு அஸ்ரியேலின் குமாரன் எரிமோத்.
௨௦. எப்பிராயீம் புத்திரருக்கு அசசியாவின் குமாரன் ஓசெயா; மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்குப் பெதாயாவின் குமாரன் யோவேல்.
௨௧. கீலேயாத்திலுள்ள மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்குச் சகரியாவின் குமாரன் இத்தோ; பென்யமீனுக்கு அப்னேரின் குமாரன் யாசியேல்.
௨௨. தாணுக்கு எரோகாமின் குமாரன் அசாரியேல்; இவர்கள் இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவராயிருந்தார்கள்.
௨௩. இஸ்ரவேலை வானத்தின் நட்சத்திரங்கள் அத்தனையாய்ப் பெருகப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லியிருந்தபடியால், தாவீது இருபது வயதுமுதல் அதற்குக் கீழ்ப்பட்டவர்களின் இலக்கத்தைத் தொகையேற்றவில்லை.
௨௪. செருயாவின் குமாரன் யோவாப் எண்ணத்துவக்கியும் முடிக்காதே போனான்; அதற்காக இஸ்ரவேலின்மேல் கடுங்கோபம் வந்தது; ஆதலால் அந்தத் தொகை தாவீது ராஜாவின் நாளாகமக் கணக்கிலே ஏறவில்லை.
௨௫. ராஜாவுடைய பொக்கிஷங்களின்மேல் ஆதியேலின் குமாரன் அஸ்மாவேத்தும், பட்டணங்களிலும் கிராமங்களிலும் துருக்கங்களிலுமுள்ள நிலத்தின் வருமான பண்டகசாலைகளின்மேல் உசியாவின் குமாரன் யோனத்தானும்,
௨௬. நிலத்தைப் பயிரிட வயல்வெளியின் வேலை செய்கிறவர்களின்மேல் கேலூப்பின் குமாரன் எஸ்ரியும்,
௨௭. திராட்சத்தோட்டங்களின்மேல் ராமாத்தியனான சீமேயும், திராட்சத்தோட்டங்களின் வரத்தாகிய திராட்சரசம் வைக்கும் இடங்களின்மேல் சிப்மியனாகிய சப்தியும்,
௨௮. பள்ளத்தாக்குகளிலுள்ள ஒலிவமரங்களின்மேலும் முசுக்கட்டை விருட்சங்களின்மேலும் கெதேரியனான பால்கானானும், எண்ணெய் கிடங்குகளின்மேல் யோவாசும்,
௨௯. சாரோனில் மேய்கிற மாடுகளின்மேல் சாரோனியனான சித்ராயும், பள்ளத்தாக்குகளிலுள்ள மாடுகளின்மேல் அத்லாயின் குமாரன் சாப்பாத்தும்,
௩௦. ஒட்டகங்களின்மேல் இஸ்மவேலியனாகிய ஓபிலும், கழுதைகளின்மேல் மெரோனோத்தியனாகிய எகெதியாவும்,
௩௧. ஆடுகளின்மேல் ஆகாரியனான யாசிசும் விசாரிப்புக்காரராயிருந்தார்கள்; இவர்களெல்லாரும் தாவீது ராஜாவின் பொருள்களுக்கு விசாரிப்புக்காரராயிருந்தார்கள்.
௩௨. தாவீதின் சிறிய தகப்பனாகிய யோனத்தான் என்னும் புத்தியும் படிப்புமுள்ள மனுஷன் ஆலோசனைக்காரனாயிருந்தான்; அக்மோனியின் குமாரன் யெகியேல் ராஜாவின் குமாரரோடிருந்தான்.
௩௩. அகித்தோப்பேல் ராஜாவுக்கு ஆலோசனைக்காரனாயிருந்தான்; அர்கியனான ஊஷாயி ராஜாவின் தோழனாயிருந்தான்.
௩௪. பெனாயாவின் குமாரன் யோய்தாவும் அபியத்தாரும் அகித்தோப்பேலுக்கு உதவியாயிருந்தார்கள்; யோவாப் ராஜாவின் படைத்தலைவனாயிருந்தான்.

நீதிமொழிகள் ௭௮:௫௬-௬௬
௫௬. ஆனாலும் அவர்கள் உன்னதமான தேவனைப் பரீட்சை பார்த்து, அவருக்குக் கோபம் மூட்டி, அவருடைய சாட்சிகளைக் கைக்கொள்ளாமற்போய்,
௫௭. தங்கள் பிதாக்களைப்போல வழிவிலகி, துரோகம்பண்ணி, மோசம்போக்கும் வில்லைப்போல் துவண்டு,
௫௮. தங்கள் மேடைகளினால் அவருக்குக் கோபம் மூட்டி, தங்கள் விக்கிரகங்களினால் எரிச்சல் உண்டாக்கினார்கள்.
௫௯. தேவன் அதைக் கேட்டு உக்கிரமாகி, இஸ்ரவேலை மிகவும் வெறுத்து,
௬௦. தாம் மனுஷருக்குள்ளே போட்ட கூடாரமாகிய சீலோவிலுள்ள வாசஸ்தலத்தை விட்டுவிலகி,
௬௧. தமது பலத்தைச் சிறையிருப்புக்கும், தமது மகிமையைச் சத்துருவின் கைக்கும் ஒப்புக்கொடுத்து,
௬௨. தமது ஜனத்தைப் பட்டயத்துக்கு இரையாக்கி, தமது சுதந்தரத்தின்மேல் கோபங்கொண்டார்.
௬௩. அவர்கள் வாலிபரை அக்கினி பட்சித்தது, அவர்கள் கன்னியாஸ்திரீகள் வாழ்க்கைப்படாதிருந்தார்கள்.
௬௪. அவர்களுடைய ஆசாரியர்கள் பட்டயத்தால் விழுந்தார்கள், அவர்களுடைய விதவைகள் அழவில்லை.
௬௫. அப்பொழுது ஆண்டவர் நித்திரை தெளிந்தவனைப்போலவும், திராட்சரசத்தால் கெம்பீரிக்கிற பராக்கிரமசாலியைப்போலவும் விழித்து,
௬௬. தம்முடைய சத்துருக்களைப் பின்புறமாக அடித்து, அவர்களுக்கு நித்திய நிந்தையை வரப்பண்ணினார்.

பிரசங்கி ௨௦:௪-௫
௪. சோம்பேறி குளிருகிறதென்று உழமாட்டான்; அறுப்பிலே பிச்சைகேட்டாலும் அவனுக்கு ஒன்றுங்கிடையாது.
௫. மனுஷனுடைய இருதயத்திலுள்ள யோசனை ஆழமான தண்ணீர்போலிருக்கிறது; புத்திமானோ அதை மொண்டெடுப்பான்.

செயல்கள் ௧௦:௧-௨௩
௧. இத்தாலியா பட்டாளம் என்னப்பட்ட பட்டாளத்திலே நூற்றுக்கு அதிபதியாகிய கொர்நேலியு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் செசரியா பட்டணத்திலே இருந்தான்.
௨. அவன் தேவபக்தியுள்ளவனும் தன் வீட்டாரனைவரோடும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்து, ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தான்.
௩. பகலில் ஏறக்குறைய ஒன்பதாம்மணி நேரத்திலே தேவனுடைய தூதன் தன்னிடத்தில் வரவும், கொர்நேலியுவே, என்று அழைக்கவும் பிரத்தியட்சமாய்த் தரிசனங்கண்டு,
௪. அவனை உற்றுப்பார்த்து, பயந்து: ஆண்டவரே, என்ன என்றான். அப்பொழுது அவன்: உன் ஜெபங்களும் உன் தருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சந்நிதியில் வந்தெட்டியிருக்கிறது.
௫. இப்பொழுது நீ யோப்பா பட்டணத்துக்கு மனுஷரை அனுப்பி, பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோனை அழைப்பி.
௬. அவன் தோல் பதனிடுகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்தில் தங்கியிருக்கிறான்; அவனுடைய வீடு கடலோரத்திலிருக்கிறது. நீ செய்யவேண்டியதை அவன் உனக்குச் சொல்லுவான் என்றான்.
௭. கொர்நேலியு தன்னுடனே பேசின தேவதூதன் போனபின்பு, தன் வீட்டு மனுஷரில் இரண்டுபேரையும் தன்னிடத்தில் சேவிக்கிற போர்ச்சேவகரில் தேவபக்தியுள்ள ஒருவனையும் அழைத்து,
௮. எல்லாவற்றையும் அவர்களுக்கு விவரித்துச் சொல்லி, அவர்களை யோப்பா பட்டணத்துக்கு அனுப்பினான்.
௯. மறுநாளிலே அவர்கள் பிரயாணப்பட்டு, அந்தப் பட்டணத்துக்குச் சமீபித்துவருகையில், பேதுரு ஆறாம்மணி நேரத்திலே ஜெபம்பண்ணும்படி மேல் வீட்டில் ஏறினான்.
௧௦. அவன் மிகுந்த பசியடைந்து சாப்பிட மனதாயிருந்தான்; அதற்கு அவர்கள் ஆயத்தம்பண்ணுகையில், அவன் ஞானதிருஷ்டியடைந்து,
௧௧. வானம் திறந்திருக்கிறதாகவும், நாலுமுனைகளும் கட்டப்பட்ட பெரிய துப்பட்டியைப்போல ஒருவிதமான கூடு தன்னிடத்தில் இறங்கித் தரையில் விடப்பட்டிருக்கிறதாகவும்,
௧௨. அதிலே பூமியிலுள்ள சகலவிதமான நாலுகால் ஜீவன்களும், காட்டுமிருகங்களும், ஊரும் பிராணிகளும், ஆகாயத்துப் பறவைகளும் இருக்கிறதாகவும் கண்டான்.
௧௩. அல்லாமலும்: பேதுருவே, எழுந்திரு, அடித்துப் புசி என்று அவனுக்குச் சொல்லும் ஒரு சத்தம் உண்டாயிற்று.
௧௪. அதற்குப் பேதுரு: அப்படியல்ல, ஆண்டவரே, தீட்டும் அசுத்தமுமாயிருக்கிற யாதொன்றையும் நான் ஒருக்காலும் புசித்ததில்லை என்றான்.
௧௫. அப்பொழுது: தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே என்று இரண்டாந்தரமும் சத்தம் அவனுக்கு உண்டாயிற்று.
௧௬. மூன்றாந்தரமும் அப்படியே உண்டாயிற்று. பின்பு அந்தக் கூடு திரும்ப வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
௧௭. அப்பொழுது பேதுரு, தான் கண்ட தரிசனத்தைக்குறித்துத் தனக்குள்ளே சந்தேகப்படுகையில், இதோ, கொர்நேலியுவினால் அனுப்பப்பட்ட மனுஷர்கள் சீமோனுடைய வீட்டை விசாரித்துக்கொண்டு வாசற்படியிலே வந்து நின்று:
௧௮. பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோன் இங்கே தங்கியிருக்கிறாரா என்று கேட்டார்கள்.
௧௯. பேதுரு அந்தத் தரிசனத்தைக்குறித்துச் சிந்தனைபண்ணிக்கொண்டிருக்கையில், ஆவியானவர்: இதோ, மூன்று மனுஷர் உன்னைத் தேடுகிறார்கள்.
௨௦. நீ எழுந்து, இறங்கி, ஒன்றுக்கும் சந்தேகப்படாமல், அவர்களுடனே கூடப்போ; நானே அவர்களை அனுப்பினேன் என்று அவனுக்குச் சொன்னார்.
௨௧. அப்பொழுது பேதுரு கொர்நேலியுவினால் தன்னிடத்தில் அனுப்பப்பட்ட மனுஷரிடத்திற்கு இறங்கிப்போய்: இதோ, நீங்கள் தேடுகிறவன் நான்தான், நீங்கள் வந்திருக்கிற காரியம் என்ன என்றான்.
௨௨. அதற்கு அவர்கள்: நீதிமானும், தேவனுக்குப் பயப்படுகிறவரும், யூதஜனங்களெல்லாராலும் நல்லவரென்று சாட்சி பெற்றவருமாகிய கொர்நேலியு என்னும் நூற்றுக்கு அதிபதி உம்மைத் தம்முடைய வீட்டுக்கு அழைப்பித்து, உம்மால் சொல்லப்படும் வார்த்தைகளைக் கேட்கும்படி பரிசுத்த தூதனாலே தேவயத்தனமாய்க் கட்டளைப்பெற்றார் என்றார்கள்.
௨௩. அப்பொழுது பேதுரு அவர்களை உள்ளே அழைத்து, அவர்களுக்கு உபசாரஞ்செய்து, மறுநாளிலே அவர்களுடனே கூடப் புறப்பட்டான்; யோப்பா பட்டணத்தாராகிய சகோதரரில் சிலரும் அவனுடனேகூடப் போனார்கள்.